பாகிஸ்தானில் இந்திய பாடலுக்கு மாணவர்கள் நடனம்; பள்ளி கூட பதிவை சஸ்பெண்டு செய்த அதிகாரிகள்

பாகிஸ்தானில் இந்திய பாடலுக்கு மாணவர்கள் நடனம் ஆடினர் என கூறி பள்ளி கூடத்தின் பதிவை அந்நாட்டு அதிகாரிகள் சஸ்பெண்டு செய்தனர்.

Update: 2019-02-16 12:50 GMT
கராச்சி,

பாகிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி கூடம் ஒன்றில் கலாசார நிகழ்ச்சி நடந்தது.  இதில் கலந்து கொண்ட மாணவர்கள் இந்திய பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியுள்ளனர்.  அவர்களுக்கு பின்னணியில் இந்திய தேசிய கொடி முன்னும் பின்னும் அசைக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றிய வீடியோ வைரலான நிலையில் அந்நாட்டு பொதுமக்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.  இதனை தொடர்ந்து விளக்கம் கேட்டு பள்ளி உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  அவர் நேரில் ஆஜராகாத நிலையில் பள்ளி கூடத்திற்கான பதிவு சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு, கல்வி நிறுவனங்களில் இந்திய கலாசாரம் ஊக்குவிக்கப்படுவது தேசிய கண்ணியத்திற்கு எதிரானது என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் பள்ளியின் துணை முதல்வர் பாத்திமா கூறும்பொழுது, பல்வேறு நாடுகளின் கலாசாரம் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள பள்ளி நிர்வாகம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.

இதில், சவூதி அரேபியா, அமெரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், இந்தியா மற்றும் பல நாடுகளின் கலாசாரங்களை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.  ஆனால் சில நிருபர்கள் நிகழ்ச்சியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை எடுத்து செய்தியாக வெளியிட்டு விட்டனர் என குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்