இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2019-04-07 22:30 GMT
ஜகார்த்தா,

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா புவிதட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்திருப்பதால் அங்கு நிலநடுக்கம் என்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. பலவேளைகளில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரும் அளவில் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், நாட்டின் மத்திய பகுதியில் உள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கமானது மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் அலோர் நகரில் கடல் மட்டத்தின் கீழ் 573 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

சில வினாடிகளுக்கு மேல் நீடித்த இந்த நிலநடுக்கத்தின் போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் அலறிஅடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது படுகாயமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. அதேபோல் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.

மேலும் செய்திகள்