இலங்கையில் இரு பிரிவினர் இடையே மோதல்; கடைகள் மீது தாக்குதல்

இலங்கையில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2019-05-12 22:45 GMT
கொழும்பு,

இலங்கையின் கொழும்பு நகரில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து கடந்த ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு பெண் உள்பட 9 பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உலகையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும், இலங்கை அரசோ உள்ளூரை சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை குற்றம் சாட்டியது. எனவே அந்த அமைப்பை தடை செய்து, ஏராளமானோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளால் இலங்கையின் பல பகுதிகளில் இரு பிரிவினர் இடையே ஒருவித பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எனவே இரு தரப்பும் அமைதி காக்குமாறு அதிபர் சிறிசேனா அறிவுறுத்தி வருகிறார். இதைப்போல மத தலைவர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் இலங்கையின் மேற்கு கடற்கரை நகரான சிலாவில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வந்தது. அங்கு இருபிரிவினர் இடையே திடீரென மோதல் வெடித்தது. இதில் அங்குள்ள வழிபாட்டுதலம், சில கடைகள் தாக்குதலுக்கு உள்ளாயின. இதனால் சிலாவ் நகர் முழுவதும் பெரும் பதற்றம் அதிகரித்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அங்கு அசம்பாவிதங்களை தவிர்க்க இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்