இலங்கையில் மசூதிகள் - இஸ்லாமியர்கள் கடைகள் மீது தாக்குதல் கிரிக்கெட் வீரர்கள் கருத்து

வன்முறையை உருவாக்குபவர்கள் தீவிரவாதிகள் எனவும் அவர்கள் இலங்கையை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே அப்படி செய்வதாகவும் மஹேலா ஜெயவர்தனே கூறியுள்ளார்.

Update: 2019-05-14 05:12 GMT
கொழும்பு

இலங்கையில் கடந்த ஏப்ரல்  21ஆம் தேதி நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இஸ்லாமியர்களின் நிர்வாக நிலையங்கள் மற்றும் மசூதிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால், மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இது தொடர்பாக இலங்கை பிரபலங்கள் பலர் கருத்து கூறி வரும் நிலையில் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், அரசியல் உள்நோக்கம் கொண்ட விஷயங்களில் நாம் சிக்கி கொள்ளக்கூடாது, வன்முறையை உருவாக்குபவர்கள் யாராக இருந்தாலும் தீவிரவாதி தான், நாடு வீழவேண்டும் என அவர்கள் விரும்புவார்கள் என பதிவிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சங்ககாரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கண்களை திறங்கள். வன்முறை, இனவெறி, வேற்றுமையால் நாம் கண்களை மூடிக்கொண்டிருந்தால் நம் நாட்டையே இழக்க நேரிடும் . இலங்கையர்களாக ஒன்று கூடுங்கள், சமாதானமாக இருங்கள், மற்றவர்களையும் பாதுகாப்புடன் வையுங்கள். பிரிவினையை தூண்டும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளுக்கு விழுந்து விடாதீர்கள். ஒரு நாடாக மீண்டும் மீண்டு வருவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்