நியூசிலாந்து கோர்ட்டில் சலசலப்பு காட்சிகள் : 51 பேரை கொன்று குவித்த பயங்கரவாதி சிரிப்பு

நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் நடந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 51 பேர் பலியானார்கள். நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதல்தான் என்பதை அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா உறுதி செய்தார்.

Update: 2019-06-14 23:30 GMT

வெலிங்டன், 

துப்பாக்கிச்சூடு நடத்தி, அந்த கொடூர காட்சிகளை ‘பேஸ்புக்’கில் நேரடியாக ஒளிபரப்பிய ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதியான பிரெண்டன் டாரண்ட் (வயது 28) கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் மீது 51 பேரை கொலை செய்தது, 40 பேரை கொல்ல முயன்றது மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில், ஆக்லாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரெண்டன் டாரண்ட் பலத்த பாதுகாப்புடன் காணொலி காட்சி மூலம், நேற்று விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணையின்போது, இந்த தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். அப்போது, பிரெண்டன் டாரண்ட் சிரித்தபடியே தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

இதனை கேட்டதும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இதனால் கோர்ட்டில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து நீதிபதி கேமரான் மாண்டெர், இந்த வழக்கின் மீது, அடுத்த ஆண்டு மே மாதம் 4–ந்தேதி வரை விசாரணை நடக்கும் என கூறினார்.

மேலும் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்டு 15–ந்தேதி நடைபெறும் என்றும், அதுவரை பிரெண்டனை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்