சுவீடனில் விமானம் ஆற்றில் விழுந்து நொறுங்கி 9 பேர் பலி

சுவீடன் நாட்டில் விமானம் ஒன்று ஆற்றில் விழுந்து நொறுங்கியதில் 9 பேர் பலியானார்கள்.

Update: 2019-07-15 23:00 GMT
ஸ்டாக்ஹோம்,

சுவீடனின் வெஸ்டர்பாட்டன் மாகாணத்தில் உள்ள உமியா நகர விமான நிலையத்தில் இருந்து, பாராசூட் சாகச வீரர்கள் (ஸ்கை டைவர்ஸ்) வழக்கமான பயிற்சிக்காக சிறிய ரக விமானம் ஒன்றில் புறப்பட்டு சென்றனர்.

விமானத்தில் பாராசூட் சாகச வீரர்கள் உள்பட 9 பேர் இருந்தனர். உமியா நகரில் உள்ள ஆற்றுக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் நடுவானில் நிலைதடுமாறிய விமானம், அதிவேகத்தில் கீழ்நோக்கி பறந்தது. இதனால் பதறிப்போன பாராசூட் சாகச வீரர்கள் விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்ப முயற்சித்தனர்.

ஆனால் அதற்குள்ளாக விமானம் ஆற்றில் விழுந்து நொறுங்கிவிட்டது. இந்த கோரவிபத்தில் விமானத்தில் இருந்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் ஸ்டீபன் லோப்வென் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்