அமெரிக்காவில் 3 நாள் சுற்றுப்பயணம்: இம்ரான்கானுக்கு உரிய வரவேற்பு அளிக்கவில்லை - சமூக வலைத்தளத்தில் கேலி

அமெரிக்காவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, இம்ரான்கானுக்கு உரிய வரவேற்பு அளிக்கப்படாதது குறித்து சமூக வலைத்தளத்தில் கேலி செய்து வருகின்றனர்.

Update: 2019-07-21 23:15 GMT
வாஷிங்டன்,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 3 நாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ளார். அங்கு அவர் இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி டிரம்பை சந்தித்துப் பேசுகிறார். சிக்கன நடவடிக்கையாக பிரதமர் இம்ரான்கான் பயணிகள் விமானத்தில் அமெரிக்கா சென்றார்.

பொதுவாக அமெரிக்கா வரும் வெளிநாட்டு தலைவர்களை அமெரிக்க வெளியுறவு மந்திரியோ அல்லது வெளியுறவு அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரிகளோ நேரில் சென்று வரவேற்பது வழக்கம். ஆனால் டல்லாஸ் விமான நிலையத்தில் சென்று இறங்கிய இம்ரான்கானை வரவேற்க அமெரிக்க அதிகாரிகள் யாரும் வரவில்லை.

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேஷி, மற்றும் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆசாத் எம் கான் ஆகியோர் மட்டுமே இம்ரான்கானை வரவேற்றதாகவும், பின்னர் அவர் மக்களுடன் சேர்ந்தே விமான நிலையத்தை விட்டு வெளியேறியதாகவும், கூறி பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. இதை பலரும் பலவிதமாக கிண்டலடித்து வருகின்றனர். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் “பாகிஸ்தான் சிறப்பாக செயல்படவில்லை என்பதற்காக இவ்வளவு பெரிய தண்டனை கூடாது” என டுவிட்டரில் ஒருவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

அதே சமயம் இம்ரான்கான் எளிமையான முறையில் பயணிகள் விமானத்தில் அமெரிக்கா சென்றதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

மேலும் செய்திகள்