அமெரிக்க விமான நிலையத்தில் பரபரப்பு: ராணுவ வீரர் வைத்திருந்த ஏவுகணை இயக்கும் கருவி பறிமுதல்

அமெரிக்க விமான நிலையத்தில் ராணுவ வீரர் ஒருவர் வைத்திருந்த ஏவுகணை இயக்கும் கருவி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-07-30 22:11 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள பால்டிமோர்/வாஷிங்டன் சர்வதேச விமானநிலையத்தில், சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கம் போல் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு பயணியின் பையை சோதனை செய்தபோது, அதில் ஏவுகணை இயக்கும் கருவி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அந்த பயணியிடம் கேட்டபோது, தான் ஒரு ராணுவ வீரர் என்றும், ராணுவ பணிக்காக குவைத்தில் இருந்ததற்கு அடையாளமாக இந்த ஏவுகணை இயக்கும் கருவி வைத்திருப்பதாகவும் கூறினார். இதையடுத்து, ஏவுகணை இயக்கும் கருவியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை பாதுகாப்பாக செயலிழக்க வைக்க தீயணைப்பு படையிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அமெரிக்காவின் விமான போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த அந்த நபர் வைத்திருந்த ஏவுகணை இயக்கும் கருவி அதிர்ஷ்டவசமாக செயலில் இல்லை. அது உடனடியாக கைப்பற்றப்பட்டு உரிய துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அந்த நபர் தனது விமான பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்