அமெரிக்காவில் படகு தீப்பிடித்து மூழ்கியது; 8 பேர் பலி

அமெரிக்காவில் படகு தீ விபத்தில் சிக்கி மூழ்கியதில் 8 பேர் பலியாகி உள்ளனர். 26 பேரை காணவில்லை.

Update: 2019-09-03 03:34 GMT
ஆக்ஸ்நார்டு,

அமெரிக்காவில் கலிபோர்னியாவின் தெற்கே சான்டா பார்பரா நகருக்கு மேற்கில் சான்டா குரூஸ் தீவின் கடலோர பகுதியில் 75 அடி நீள படகொன்றில் சுற்றுலாவாசிகள் ஸ்கூபா டைவிங்கிற்காக பயணம் செய்துள்ளனர்.  இந்நிலையில், படகு நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீப்பிடித்து கொண்டது.  இதனால் படகின் கீழ் பகுதியில் தூக்கத்தில் இருந்தவர்கள் சிக்கி கொண்டனர்.

இதுபற்றி அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்கள், சிறிய ரக படகுகளில் சம்பவ இடத்திற்கு சென்றனர்.  எனினும் பற்றி எரிந்த தீ மற்றும் தீவிர வெப்பம் ஆகியவற்றால் படகின் அருகே நெருங்க முடியாமல் உயிர் பிழைத்தவர்களை மீட்பதில் தடை ஏற்பட்டது.  அடர்பனி சூழலும் மீட்பு பணி முயற்சிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர்.  26 பேரை காணவில்லை.  படகை செலுத்திய 5 பேர் தீ விபத்து ஏற்பட்டது அறிந்ததும் படகில் இருந்து நீருக்குள் குதித்து தப்பி சென்றனர்.  படகில் மொத்தம் 39 பேர் இருந்துள்ளனர்.

மேலும் செய்திகள்