அமெரிக்காவில் பரிதாபம்: மலை ஏறிய பெண் தவறி விழுந்து பலி

அமெரிக்காவில் மலை ஏறிய பெண் ஒருவர் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.

Update: 2019-09-08 22:18 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யோஸ்மைட் தேசிய பூங்காவில் ‘தி ஹாப் டோம்’ என்ற மலை உள்ளது. 8,800 அடி உயரம் கொண்ட இந்த மலை யோஸ்மைட் தேசிய பூங்காவின் அடையாளமாக உள்ளது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் இங்கு வந்து ‘தி ஹாப் டோம்’ மலையில் ஏறி, சிகரம் தொடும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இந்த மலையேற்றத்தின்போது அடிக்கடி மோசமான விபத்துகள் நிகழ்கின்றன.

இந்த நிலையில் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த டேனிலி பர்னெட் (வயது 29) என்ற பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘தி ஹாப் டோம்’ மலையில் ஏறினார். அவர் கயிறு உள்ளிட்ட உரிய பாதுகாப்பு கருவிகளுடன் மலையேறிய போதிலும், எதிர்பாராத விதமாக மலையில் இருந்து தவறி விழுந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பூங்காவின் அதிகாரிகள் விரைந்து சென்று டேனிலி பர்னெட்டை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதையடுத்து, அவரது உடலை மீட்டு அவரின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்