சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஒருவர் பலியானார்.

Update: 2019-09-08 22:37 GMT
பீஜிங்,

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள நெய்ஜியாங் நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானதாகவும், பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் சீன புவியியல் ஆய்வுமையம் தெரிவித்தது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 6.42 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. அப்போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் அலறியடித்தபடி கட்டிடங்களை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நெய்ஜியாங் மட்டும் இன்றி அதனை சுற்றி உள்ள நகரங்களையும் நிலநடுக்கம் உலுக்கியது. சுமார் 20 வீடுகள் முற்றிலுமாக இடிந்து, தரைமட்டமாகின. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது. மேலும் நிலநடுக்கத்தின்போது 200-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்தன. நிலநடுக்கத்தை தொடர்ந்து அதிவேக ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டு மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்