லண்டனுக்கு சிகிச்சைக்காக சென்ற நவாஸ் ஷெரீப் உடல்நிலையில் இம்ரான்கான் சந்தேகம்

லண்டனுக்கு சிகிச்சைக்காக சென்ற நவாஸ் ஷெரீப் உடல்நிலையில் பிரதமர் இம்ரான்கான் சந்தேகம் எழுப்பி உள்ளார்.

Update: 2019-11-23 22:41 GMT
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (வயது 70). இவர் ஊழல் வழக்கில் 7 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகின. உடல்நிலையைக் காரணம் காட்டி அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

வீட்டில் இருந்து அவர் சிகிச்சை பெற்ற நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால், அவர் லண்டனில் சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறினர்.

அதைத் தொடர்ந்து அவர் லண்டன் செல்ல வேண்டுமானால், ரூ.700 கோடிக்கான உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை பிரதமர் இம்ரான்கான் அரசு விதித்தது. அதனை ஏற்க மறுத்த நவாஸ் ஷெரீப், லாகூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

அதை விசாரித்த நீதிபதிகள், நிபந்தனை இன்றி நவாஸ் ஷெரீப்பின் பெயரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நீக்க அரசுக்கு உத்தரவிட்டனர். அதன்படி தடை பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப் பெயர் நீக்கப்பட்டு, அவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஆம்புலன்ஸ் விமானத்தில் லண்டன் சென்றார்.

அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நவாஸ் ஷெரீப் உடல்நிலை குறித்த மருத்துவ பரிசோதனை அறிக்கை மீது பிரதமர் இம்ரான்கான் சந்தேகம் கிளப்பி உள்ளார்.

நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான மியான்வாலியில் நடந்த நிகழ்ச்சியில் இம்ரான்கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, “ நவாஸ் ஷெரீப்புக்கு 15 நோய்கள் இருப்பதாக மருத்துவ பரிசோதனை அறிக்கை கூறுகிறது. அதிலும் குறிப்பாக இதயத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் லண்டன் செல்வதற்காக விமானத்தில் ஏறிய விதத்தை பார்த்தபோது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கையை மீண்டும் பார்த்தேன். அவருக்கு இதயத்தில் பிரச்சினை உள்ளது, சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யவில்லை, அவருக்கு நீரிழிவு பாதிப்பு உள்ளது என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது” என்றார்.

ஆனால் நவாஸ் ஷெரீப் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையின்மீது இம்ரான்கான் சந்தேகம் எழுப்பி இருப்பதற்கு நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்த வெறுப்புணர்வு பேச்சுக்காக இம்ரான்கான் மீது வழக்கு போட வேண்டும் என்று கூறி உள்ளது.

மேலும், அந்த கட்சியின் பொதுச்செயலாளர் அசன் இக்பால் கருத்து தெரிவிக்கையில், “இம்ரான்கான் நிறுவிய சவுக்கத் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் பஞ்சாப் சுகாதார மந்திரி யாஸ்மின் ரஷீத் மேற்பார்வையில் இயங்கும் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகள் மீதுகூட சந்தேகம் எழுப்பியவர் இம்ரான்கான்” என கூறினார்.

மேலும் செய்திகள்