துப்பாக்கி சூடு எதிரொலி: சவுதி மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம் - அமெரிக்கா அதிரடி

துப்பாக்கி சூடு எதிரொலியாக, சவுதி மாணவர்களுக்கு விமான பயிற்சியினை நிறுத்தம் செய்து அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது,

Update: 2019-12-11 22:34 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவில் புளோரிடா மாகாணம், பென்சாகோலா என்ற இடத்தில் உள்ள கடற்படை பயிற்சி நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சவுதி அரேபியாவை சேர்ந்த பயிற்சி மாணவரான முகமது அல் ஷாம்ரானி துப்பாக்கி சூடு நடத்தினார்.

இதில் குண்டு பாய்ந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய முகமது அல் ஷாம்ரானியை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள கடற்படை விமான நிலையங்களில் சவுதி அரேபிய ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி அளிப்பதை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தியுள்ளது. ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியை மட்டுமே நிறுத்தியுள்ளதாகவும், வகுப்பறை படிப்புகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பால், அமெரிக்காவில் பயிற்சி பெறும் சுமார் 300 சவுதி அரேபிய மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையிலான நட்புறவில் விரிசலை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்