திடீரென காரின் மீது விழுந்த பனிக்கட்டி; அதிர்ஷ்டவசமாக தப்பிய பெண்

இங்கிலாந்தில் சாலையில் சென்ற காரின் மீது திடீரென பெரிய பனிக்கட்டி விழுந்த சம்பவத்தில் பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக தப்பி பிழைத்துள்ளார்.

Update: 2019-12-23 11:20 GMT
லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் வார்விக்ஷைர் பகுதியில் வசித்து வருபவர் லாரா ஸ்மித் (வயது 26).  கோவென்ட்ரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த அவர் பணி முடிந்து தனது காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

அவருக்கு முன்னால் சென்ற லாரியில் இருந்து பெரிய அளவிலான பனிக்கட்டி ஒன்று திடீரென காரின் முன்பக்கம் மீது விழுந்தது.  இதில் கண்ணாடியில் கீறல் விழுந்து சேதமடைந்தது.  எனினும் லாரா ஸ்மித் , இந்த திடீர் விபத்தில் காரை தனது கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்.  அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இதுபற்றி அவர் கூறும்பொழுது, விரைவு சாலையில் காரில் சென்று கொண்டிருந்தேன்.  என்ன நடந்திருக்க கூடும் என நினைக்கும்பொழுது, எனக்கு அதிக அச்சம் ஏற்படுகிறது.  உண்மையில் அதிர்ச்சியில் உறைந்து விட்டேன்.

அதிர்ஷ்டவசமாக நான் இங்கிருக்கிறேன்.  எனது கார் மட்டுமே சேதமடைந்து உள்ளது.  திடீரென நடந்த இந்த சம்பவத்தினால் நான் பயந்துபோய் விட்டேன் என கூறியுள்ளார்.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வார்விக்ஷைர் நகர போலீசார் அவரது காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்தனர்.  இந்த விபத்திற்கு பின் லாரா ஸ்மித்தை பாதுகாப்புடன் அவரது வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்