வங்கியில் கொள்ளை அடித்த பணத்தை பொதுமக்களை நோக்கி வீசி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தவர்

அமெரிக்காவில் வங்கியில் கொள்ளை அடித்து கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் என பணம் முழுவதனையும் பொதுமக்களிடம் வீசி எறிந்த நபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-12-25 12:08 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவின் கொலராடோ நகரில் அகாடமி வங்கி உள்ளது.  கிறிஸ்துமஸ் தினத்திற்கு 2 நாட்களுக்கு முன் இந்த வங்கிக்குள் 65 வயது நிறைந்த டேவிட் வெய்ன் ஆலிவர் என்பவர் சென்றுள்ளார்.

அங்கிருந்த ஊழியர்களை நோக்கி திடீரென ஆயுதம் ஒன்றை எடுத்து அச்சுறுத்திய ஆலிவர், வங்கியில் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு பணம் எடுத்து கொண்டு வெளியேறினார்.

இதன்பின்னர் தெருவில் நின்றபடி, தனது பையில் இருந்து பணம் முழுவதனையும் வெளியே எடுத்து வானை நோக்கி வீசி 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என கூறியுள்ளார்.  இதனால் அந்த பகுதியில் கூடியிருந்தவர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.  ஒரு சிலர் அவற்றை எடுத்து கொண்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து கொலராடோ போலீசார் வந்து ஆலிவரை கைது செய்தனர்.  ஆனால், கைது செய்யும்பொழுது அவரிடம் ஆயுதம் எதுவும் இல்லை.

வங்கியில் இருந்து கொள்ளையடித்த பணத்தில் சிலவற்றை திருப்பி அளிக்க சிலர் முன்வந்துள்ளனர்.  ஆனால் ஆயிரக்கணக்கான டாலர் மதிப்பில் பணம் காணவில்லை என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்