கங்கண சூரிய கிரகணத்தை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த கலைஞர்!

புகைப்பட கலைஞர் ஒருவர் கங்கண சூரிய கிரகணத்தை வித்தியாசமாக புகைப்படம் எடுத்துள்ளார்.

Update: 2019-12-27 13:30 GMT
ஐக்கிய அமீரகம்,

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் நேர் கோட்டில் வரும்போது, சூரியன் மறைக்கப்பட்டு சந்திரனின் நிழல் பூமியில் விழும். இதை சூரிய கிரகணம் என்கிறோம். வானில் ஏற்படும் இந்த அபூர்வ நிகழ்வான சூரிய கிரகணம் அமாவாசை தினத்தில்தான் ஏற்படும். இதேபோல் சந்திரகிரகணம் பவுர்ணமி நாளில்தான் ஏற்படும்.

சூரிய கிரகணத்தின் போது சந்திரன் சூரியனை முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் என்றும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் என்றும், சந்திரன் சூரியனின் மைய பகுதியை மறைத்த நிலையில் சூரியனின் வெளிப்புற விளிம்பு பகுதி நெருப்பு வளையம் போல் வட்டமாக தெரிந்தால் அது கங்கண சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. கங்கண சூரிய கிரகணத்துக்கு வளைய சூரிய கிரகணம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

அமாவாசை தினமான நேற்று கங்கண சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்த கிரகணம் முதலில் சவுதி அரேபியா நாட்டில் தெரிய தொடங்கியது. அங்கு தொடங்கிய கிரகணத்தின் பாதை தென்கிழக்கு திசையில் அரபிக்கடல் நோக்கி நகர்ந்து இந்தியாவில் கேரளாவின் வட பகுதி, கர்நாடகத்தின் தென்பகுதி, தமிழகம் வழியாக இலங்கை, சிங்கப்பூர், இந்தோனேசியா நோக்கி சென்றது.

இதனால் கிரகண பாதையில் அமைந்திருந்த பகுதிகளில் சூரியனை சந்திரன் மறைத்ததை நன்றாக பார்க்க முடிந்தது. கிரகண பாதையில் இருந்து விலகி இருந்ததால் வட மாநிலங்களில் பகுதி சூரிய கிரகணத்தைத்தான் காண முடிந்தது.

தமிழ்நாட்டில், வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் முதலில் சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்தது. அங்கு கங்கண சூரிய கிரகணம் முழுமையாக தெரிந்தது.

இந்நிலையில், இந்த அரிய நிகழ்வை வித்தியாசமாக புகைப்படம் எடுக்க வேண்டும் என ஜோஷ்வா கிரிப்ஸ் என்ற புகைப்பட கலைஞர் விரும்பினார்.

இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் பாலைவனத்தில், ஒட்டகத்துடன் சேர்த்து சூரிய கிரகணத்தை கச்சிதமாக புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை எடுக்க திட்டமிட்டதை தனது பேஸ்புக் பக்கத்தில் ஜோஷ்வா கிரிப்ஸ் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் தற்போது  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்