சர்வதேச போலீஸ் தலைவருக்கு 13½ ஆண்டு சிறை: சீன கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

சர்வதேச போலீஸ் தலைவருக்கு 13½ ஆண்டு சிறை தண்டனை விதித்து சீன கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

Update: 2020-01-21 12:28 GMT
பீஜிங்,

இன்டர்போல் என்று அழைக்கப்படுகிற சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவர் பதவி வகித்தவர், மெங் ஹாங்வெய். சீனாவை சேர்ந்தவர்.

இவர் இன்டர்போல் தலைமையகமான பிரான்சில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு சீனாவுக்கு சென்றிருந்தபோது மாயமானார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இவர் சீனாவில் பொது பாதுகாப்புக்கான துணை மந்திரியாகவும் பதவி வகித்தவர் ஆவார். இவர் 2.1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.14 கோடியே 70 லட்சம்) லஞ்சம் வாங்கியதாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக சீனா கூறியது.

இவரது மனைவியும், குழந்தைகளும் கடத்தல் அபாயத்தின் கீழ் இருப்பதாக கூறியதால், பிரான்ஸ் நாடு அவர்களுக்கு தஞ்சம் அளித்தது.

இந்த நிலையில் மெங் ஹாங்வெய் மீதான வழக்கு விசாரணை, தியான்ஜின் முதல் இடைநிலை கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையின்போது அவர் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார். இப்போது, விசாரணை முடிந்த நிலையில் அவருக்கு நேற்று 13½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தியான்ஜின் முதல் இடைநிலை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. மேலும் 2 லட்சத்து 90 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.2 கோடியே 3 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டது.

மெங் ஹாங்வெய் குற்றச்சாட்டுகளை உண்மையாகவே ஒப்புக்கொண்டுள்ளதால், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டார் என கோர்ட்டு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்