கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு

கரீபியன் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கியூபா உள்ளிட்ட தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2020-01-29 01:22 GMT
ஹவானா,

கரீபியன் தீவு நாடுகளான ஜமைக்கா மற்றும் கியூபாவுக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கமானது ஜமைக்காவின் லூசியா நகரில் இருந்து வடமேற்கில் 115 கி.மீ. தொலைவிலும், கியூபாவின் தென்மேற்கில் 140 கி.மீ. தூரத்திலும் கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

கரீபியன் தீவுகள் உள்பட மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் வரை அனைத்து பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதாக தெரிகிறது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறி வீதிகளிலும், திறந்த வெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து கியூபா, ஜமைக்கா மற்றும் கேமன் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடற்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். எனினும் சிறிது நேரத்துக்கு பிறகு சுனாமி அபாயம் நீங்கியதாகவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் சர்வதேச சுனாமி ஆய்வு மையம் தெரிவித்தது.

நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களுக்கு லேசான சேதங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை. மேலும் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.

மேலும் செய்திகள்