ஆப்கானிஸ்தானில் ராணுவத்திடம் சரணடைந்த 59 தலிபான் பயங்கரவாதிகள்

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் 59 பேர் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு ராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர்.

Update: 2020-02-04 17:20 GMT
காபுல்,

ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் பயங்கரவாத அமைப்பு, அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்திவருகின்றனர். 

ராணுவத்தினரின் தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகளும் அவ்வப்போது பதில் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதற்கிடையில் தலிபான் பயங்கரவாதிகள் மீது ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் சமீபகாலமாக அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பல கிராமங்களை மீட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் ஹார், பேட்ஹிஸ், ஹிரேட் மாகாணங்களை சேர்ந்த 59 தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு ஆப்கான் ராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர்.  

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திவரும் அதிரடி தாக்குதல்களுக்கு பயந்து கடந்த ஜனவரி மாதம் முதல் 500-க்கும் அதிகமான தலிபான், ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரண் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்