அமெரிக்காவில் இளம் ‘ராப்’ பாடகர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இளம் ‘ராப்’ பாடகர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Update: 2020-02-20 23:45 GMT
நியூயார்க், 

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ‘ராப்’ பாடகர் பாப் ஸ்மோக் (வயது 20). பஷர் பராகா ஜாக்சன் என்ற இயற்பெயரை கொண்ட இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. பாப் ஸ்மோக் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள மேற்கு ஹாலிவுட் நகரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாப் ஸ்மோக் மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது கொள்ளை கும்பல் புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பாப் ஸ்மோக் கொள்ளை கும்பலை விரட்டியடிக்க அவர்களுடன் போராடினார்.

அப்போது கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவர் பாப் ஸ்மோக்கை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அதன் பின்னர் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதற்கிடையில் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு உயிருக்கு போராடி கொண்டிருந்த பாப் ஸ்மோக்கை அவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

எனினும் சிகிச்சை பலனளிக்காததால் அவர் பரிதாபமாக இறந்தார். பாப் ஸ்மோக்கின் மறைவை தொடர்ந்து, ‘ராப்’ மற்றும் ‘பாப்’ சமூக வளைத்தளங்கள் இணையதளம் வாயிலாக அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்