கொரோனா வைரஸ் பீதி: மனைவியை குளியலறையில் அடைத்து வைத்த கணவர்

கொரோனா வைரஸ் பீதியால் லிதுவேனியாவில் கணவர் ஒருவர் தனது மனைவியை குளியலறையில் அடைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-03-06 00:00 GMT
வில்னியஸ், 

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளது. பிற ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த பால்டிக் நாடான லிதுவேனியாவில் கொரோனா வைரஸ் பீதியால் கணவர் ஒருவர் தனது மனைவியை குளியலறையில் அடைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

50 வயதை நெருங்கிய அந்த பெண், வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருடன் தான் பேசியதால் தனக்கு தொற்று இருக்கலாம் என்று கணவரிடம் அசட்டுத்தனமாக கூற அது அவருக்கே வினையாக அமைந்துவிட்டது.

அந்த பெண்ணின் கணவரும், வயது வந்த 2 வாரிசுகளும் சேர்ந்து அவரை குளியலறையில் அடைத்து வைத்து வெளியே விடாமல் தாழ்ப்பாள் போட்டுவிட்டனர்.

இதுபற்றி போலீசாருக்கு தெரியவர அவர்கள் உடனடியாக விரைந்து சென்று, அந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

20 லட்சத்து 80 ஆயிரம் பேரை மக்கள் தொகையாக கொண்ட லிதுவேனியாவில் ஒரேயொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது குறிப்படத்தக்கது.

மேலும் செய்திகள்