மெக்சிகோவில் மகளிர் தின பேரணியில் பெரும் வன்முறை: 60 பெண்கள் காயம்

மெக்சிகோவில் மகளிர் தின பேரணியில் ஏற்பட்ட பெரும் வன்முறையில், 60 பெண்கள் காயமடைந்தனர்.

Update: 2020-03-09 22:21 GMT
மெக்சிகோசிட்டி,

மெக்சிகோ நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அங்கு ஒரு நாளில் சராசரியாக 10 பெண்கள் கொலை செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி பெண்ணியவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மகளிர் தினத்தையொட்டி நேற்று முன்தினம் தலைநகர் மெக்சிகோசிட்டியில் ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு பிரமாண்ட பேரணி நடத்தினர்.

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தக்கோரியும் நடந்த பேரணியில் சுமார் 80 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர். அமைதியாக தொடங்கி நடைபெற்று கொண்டிருந்த இந்த பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது பேரணியில் கலந்து கொண்ட சில பெண்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்தனர்.

மேலும் வழியில் கண்ணில் தென்பட்ட கட்டிடங்கள் உள்ளிட்ட பொது சொத்துகளுக்கும் தீவைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்தனர். இந்த மோதலில் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் கலவரத்தில் ஈடுபட்டதாக 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்