அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு: உயிர் இழப்பு லட்சத்தை தாண்டும் நிபுணர்கள் எச்சரிக்கை ; சமூக விலகல் நீட்டிப்பு

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால உயிர் இழப்பு லட்சத்தை தாண்டும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இதை தொடர்ந்து ஏப்ரல் 30-ந்தேதி வரை சமூக விலகல் உத்தரவை ஜனாதிபதி டிரம்ப் நீட்டித்து உள்ளார்.

Update: 2020-03-30 03:43 GMT
வாஷிங்டன்

கொரோனா வைரஸிற்கு  அமெரிக்காவில் இதுவரை 139,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. உலகில் அதிக நோய் தொற்று உள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அதே நேரத்தில் 2,400 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்து உள்ளனர்.

 உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 721,412 ஆக உள்ளது.  தற்போதைய நிலவரப்படி 33,956 பேர் உயிரிழந்துள்ளனர். 151,004 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் 100,000 முதல் 200,000 அமெரிக்கர்கள் உயிரிழக்க கூடும் என அமெரிக்க அரசின்  உயர்மட்ட தொற்று நோய் நிபுணர் ஞாயிற்றுக்கிழமை எச்சரித்து உள்ளார்.

வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் முக்கிய உறுப்பினரும் நாட்டின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணருமான  டாக்டர் அந்தோணி ஃபாசி கூறியதாவது:-

கொரோனா மாதிரிகள் அடிப்படையில், கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா 100,000 அல்லது அதற்கு மேற்பட்ட இறப்புகளை சந்திக்க கூடும். ஏற்கனவே அமெரிக்கா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் 2,000 க்கும் மேற்பட்ட  உயிர்களைக் பலி கொண்டுள்ளது என கூறினார்.

இதை தொடர்ந்து ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வைரஸ் பரவாமல் தடுக்க ஏப்ரல் இறுதி வரை மக்கள் இன்னும் 30 நாட்கள் வீட்டிலேயே இருக்குமாறு சமூக விலகல் வழிகாட்டுதல்களை நீட்டித்து உள்ளார்.

கிராமி விருது வென்ற அமெரிக்க பாடகர் ஜான் பிரைன்(வயது 73) கொரோனா வைரஸுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு "ஆபத்தான" நிலையில் உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்