மந்திரிசபை கூட்டத்தில் பங்கேற்றபோது உடல்நலக்குறைவு: ஐவரிகோஸ்ட் நாட்டின் பிரதமர் திடீர் மரணம்

மந்திரிசபை கூட்டத்தில் பங்கேற்றபோது ஏற்பட்டிருந்த உடல்நலக்குறைவால், ஐவரிகோஸ்ட் நாட்டின் பிரதமர் மரணமடைந்தார்.

Update: 2020-07-09 21:39 GMT
அபித்ஜான், 

ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமராக இருந்து வந்தவர், அமடோ கோன் கூலிபாலி (வயது 61). இவர் கடந்த 2012-ம் ஆண்டு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில் அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்று 2 மாதங்கள் சிகிச்சை செய்து கொண்டு சமீபத்தில் நாடு திரும்பினார்.

நேற்று முன்தினம் அவர் மந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர் அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். வரும் அக்டோபர் மாதம் அந்த நாட்டில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளராக அமடோ போட்டியிட இருந்தார். இந்த நிலையில் அவர் திடீரென மரணம் அடைந்திருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் அமடோவின் மறைவுக்கு அதிபர் ஒட்டாரா ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், “ 30 ஆண்டு காலம் எனது நெருங்கிய கூட்டாளியாக இருந்ததுடன் எனது தம்பியாகவும், மகனாகவும் விளங்கிய அமடோவுக்கு மரியாதை செலுத்துகிறேன். தாய்நாட்டின் மீது மிகுந்த விசுவாசம், பக்தி மற்றும் அன்பு கொண்ட ஒரு அரசியல்தலைவரின் நினைவுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்” என கூறி உள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பாரீஸ் நகரில் சிகிச்சை முடித்துக்கொண்டு அபித்ஜான் விமான நிலையம் வந்திறங்கியபோது, “அதிபருடன் சேர்ந்து நமது நாட்டை முன்னேற்றுவதற்காகவும், கட்டியெழுப்புவதற்காகவும் என் பணியைத் தொடர்வதற்காக நான் திரும்பி வந்துள்ளேன்” என உற்சாகமாக கூறிய பிரதமர் அமடோ ஒரு வார காலத்துக்குள் மரணம் அடைந்திருப்பது அந்த நாட்டு மக்களை மீளாத்துயரில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்