அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு - பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இருந்து டிரம்ப் பாதியிலேயே வெளியேறினார்

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு காரணமாக ஜனாதிபதி டிரம்ப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

Update: 2020-08-12 01:03 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஜனாதிபதி டிரம்ப் தினமும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார். வெள்ளை மாளிகையில் உள்ள ஒரு அலுவலகத்தில் இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று வழக்கம்போல் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்தார். அப்போது டிரம்ப் அருகே வந்த ரகசிய பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் அவரது காதில் ஏதோ ரகசியமாக கூறினர்.

அதனை தொடர்ந்து டிரம்ப் தனது பாதுகாவலர்களுடன் அங்கிருந்து வெளியேறினார். இதனால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது. சில நிமிடங்களுக்கு பிறகு ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் “வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. வெள்ளை மாளிகைக்கு அருகே ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்ததால், பாதுகாப்பு படையினர் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது” என விளக்கமளித்தார்.

மேலும் அவர் “வெள்ளை மாளிகை மிகவும் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. எப்போதும்போல் விரைவான மற்றும் மிகவும் பயனுள்ள வேலையை செய்ததற்காக நமது பாதுகாப்பு படைக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்” என தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் டிரம்ப் மேலும் கூறியதாவது:-

துரதிர்ஷ்டவசமாக இதுதான் உலகமாக இருக்கிறது. ஆனால் உலகம் எப்போதும் ஆபத்தான ஓர் இடமாகவே உள்ளது. உலகம் ஏதோ தனிச்சிறப்பான இடமாக இல்லை. நூற்றாண்டுகளைத் திரும்பிப் பார்த்தோமானால் உலகம் வாழ்வதற்கு எவ்வளவு அபாயகரமான பகுதியாக உள்ளது. மிகவும் ஆபத்தான ஒன்றாக உலகம் உள்ளது. தொடர்ந்து ஒரு காலக்கட்டம் வரை இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. என் பாதுகாவலர்கள் மிகச்சிறப்பானவர்கள். இவர்களுக்கு உயர்மட்ட பயிற்சி உள்ளது. இவர்கள் என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். நான் மீண்டும் உங்களை (பத்திரிகையாளர்கள்)சந்திப்பேன் என்று நினைக்கவில்லை.நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து பாதுகாப்பு படையினர் டுவிட்டரில் கூறியதாவது:

வெள்ளை மாளிகைக்கு மிக அருகே உள்ள பென்சில்வேனியா அவென்யூவின் 17-வது தெருவில் மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தார். இதனை கவனித்த வெள்ளை மாளிகை பாதுகாப்பு படையினர் தற்காப்பு நடவடிக்கையாக ஆயுதங்களுடன் வந்த அந்த நபரை சுட்டு வீழ்த்தினர். பின்னர் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்த போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தாக்குதல் நடத்திய நபர் யார் தாக்குதலின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இதுபற்றி சட்ட அமலாக்க அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்