நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பின் 2வது அலை; 12 நாள் ஊரடங்கு நீட்டிப்பு

நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பின் 2வது அலை பரவ தொடங்கிய நிலையில் பிரதமர் ஜெசிந்தா ஊரடங்கை 12 நாட்களுக்கு நீட்டித்து உள்ளார்.

Update: 2020-08-14 13:36 GMT
வெல்லிங்டன்,

உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவான நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தில், கொரோனா பரவ தொடங்கிய கடந்த மார்ச் இறுதியில் தேசிய அளவில் எச்சரிக்கை விடப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதன் பயனாக, கொரோனாவில் இருந்து விடுபட்டு விட்டோம் என பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தரப்பில் கடந்த ஏப்ரலில் அறிவிப்பு வெளியானது.  அதுவரை 1,122 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.  19 பேர் உயிரிழந்து இருந்தனர்.

எனினும், கடந்த 102 நாட்களுக்கு பின்னர் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் மீண்டும் தொற்று கண்டறியப்பட்டது.  இதனையடுத்து பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் வைரஸ் பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்லாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நியூசிலாந்தில் இன்று 12 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டன.  இதனால், மொத்த பாதிப்பு 1,251 ஆக உயர்ந்து உள்ளது.  இதுவரை 22 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுபற்றி அந்நாட்டு பிரதமர் ஆர்டன் கூறும்பொழுது, வைரசானது எங்கிருந்து வந்தது என்பது பற்றி விசாரணை தொடர்ந்து வருகிறது.  எனினும் அதுபற்றி இன்னும் தெளிவாக தெரியவரவில்லை.  பாதிக்கப்பட்ட 29 பேரும் ஆக்லாந்தில் இருந்து தொற்றுக்கு ஆளானவர்கள் என தெரிய வந்துள்ளது.  ஆக்லாந்து மைய புள்ளியாக உள்ளது.  38 பேர் அரசு முகாமில் உள்ளனர்.

இந்த மைய புள்ளியில் இருந்து இன்னும் பல பாதிப்புகள் தெரிய வரும்.  பாதிப்பு குறைவதற்கு முன் அது அதிகரிக்கும் என கூறியுள்ளார்.  இதனை தொடர்ந்து நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் 12 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது என அவர் அறிவித்து உள்ளார்.  இந்த 12 நாட்களுக்குள் தொற்றுக்கான முக்கிய நபர் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவார் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்