முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து டிரம்ப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுத்த யூடியூப் நிறுவனம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை யூடியூப் நிறுவனம் நீக்கியது.

Update: 2021-01-13 06:27 GMT
வாஷிங்டன்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதை அமெரிக்க காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜனவரி 6-ஆம் தேதி ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமனறத்தின் உள்ளே வரை சென்று நடத்தப்பட்ட இந்த வரலாற்றுமிக்க கலவரத்தில் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் போலீஸ் அலுவலகங்கள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது.

ஜோ பைடன் வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவி பிரமாணம் செய்யவுள்ள நிலையில், அதே நாளில் அல்லது அதற்குறப்பட்ட நாட்களில் மீண்டும் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என்று அமெரிக்க உளவுத்துறை  எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் வன்முறை தொடர்பாக சமூகவலைதளமான டுவிட்டரில் பல்வேறு கருத்துக்கள், வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வந்த 70,000-க்கும் மேற்பட்ட கணக்குகளை தற்காலிகமாக டுவிட்டர் நிறுவனம் நிறுத்தியது.

கடந்த வாரம் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்கியது.  இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை யூடியூப் நிறுவனம் நீக்கியது.

வன்முறையை தூண்டும் வகையிலும், விதிகளுக்கு புறம்பாக இருந்ததாகவும் அதனை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது.

டுவிட்டர், முகநூல், இன்ட்ஸ்டாகிராமைத் தொடர்ந்து தற்போது யூ டியூப் நிறுவனமும் டிரம்ப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்