கொரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு இலங்கை நன்றி

இலங்கையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட உள்ளது.

Update: 2021-01-27 01:06 GMT
கோப்பு படம்
கொழும்பு,

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை, நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு இந்தியா வழங்கி வருகிறது. மாலத்தீவு, பூடான், வங்காளதேசம், நேபாளம், மியான்மர், ஷெசல்ஸ் ஆப்கானிஸ்தான், மோரிஷஸ் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது. 

அந்த வகையில் இலங்கைக்கு 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக வழங்குகிறது. இந்த தடுப்பூசிகள் நாளை ( வியாழக்கிழமை) கொழும்பு வந்து சேரும் என்று இலங்கை பிரதமர் மகிந்த  ராஜபக்சே தெரிவித்தார். மேலும், தடுப்பூசியை வழங்க முன்வந்த இந்தியாவுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக  இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இலங்கை அரசு கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. 

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டமாக, இந்தியாவில் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மேலும் செய்திகள்