பாகிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்

சார்ஜாவிலிருந்து லக்னோவுக்கு வந்த இந்திய விமானத்தில் பயணி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பாகிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Update: 2021-03-02 09:19 GMT
கராச்சி

பாகிஸ்தான் விமானப்போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட தகவலின் படி, ஷார்ஜாவிலிருந்து லக்னோவுக்கு பயணித்த இண்டிகோ ஏர்லைன்சிக்கு சொந்தமான 6இ1412 பயணிகள் விமானம், ஈரான் வழியாக பாகிஸ்தானுக்கு வந்தது. விமானத்தில் பயணி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விமானி, பாகிஸ்தான் விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் கராச்சி விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார்.

உடனே அனுமதி வழங்கப்பட்டு விமானம் கராச்சியில் தரையிறங்கியது. எனினும், 67 வயதான பயணி ஹபீபுர் ரஹ்மான் விமானத்திலே இறந்துவிட்டார்.மாரடைப்பால் அவர் இறந்ததாக பாகிஸ்தான் மருத்துவ குழு தெரிவித்ததாக பாகிஸ்தான் விமானப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

மருத்துவ-சட்ட முறைகள் முடிந்த பின்னர் கராச்சியிலிருந்து புறப்பட்ட விமானம் இந்தியா வந்தடைந்தது. பாகிஸ்தானில் இந்திய விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த நவம்பர் மாதம் பயணி ஒருவர் மாரடைப்பால் இறந்ததால் சவுதியில் இருந்து இந்திய வந்த விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்