‘எங்கள் மகன் கருப்பாக பிறந்து விடுவானோ என்று அரச குடும்பத்தினர் கவலைப்பட்டனர்’; மனம் திறந்த ஹாரி-மேகன் தம்பதி

எங்கள் மகன் கருப்பாக பிறந்து விடுவானோ என்று அரச குடும்பத்தினர் கவலைப்பட்டதாக ஹாரி மேகன் தம்பதி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்தனர்.‌

Update: 2021-03-08 22:42 GMT
அரச குடும்பத்தில் இருந்து விலகினர்
இங்கிலாந்து இளவரசர் ஹாரியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.எனினும் இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரம் மீது அதிக பற்றில்லாமல் இருந்து வந்த ஹாரி-மேகன் தம்பதி, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர்.தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆர்ச்சி என்ற 2 வயது மகன் இருக்கும் நிலையில், மேகன் 2-வது முறையாக கர்ப்பமாகி இருக்கிறார்.‌

இதனிடையே ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்திலிருந்து விலகியதற்கு இதுதான் காரணம் என்று இங்கிலாந்து பத்திரிகைகள் ஆளுக்கொரு காரணத்தை கூறி பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு வந்தன. ஆனால் இவற்றுக்கெல்லாம் எந்தவித பதிலையும், விளக்கத்தையும் தெரிவிக்காமல் ஹாரியும் மேகனும் மவுனம் காத்து வந்தனர்.

மவுனம் கலைத்து, மனம் திறந்தனர்
இந்த நிலையில் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்பிரே நடத்திய நேர்காணலில் ஹாரி, மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தில் தாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சவால்கள், தங்களுக்கு பிறக்கவிருக்கும் அடுத்த குழந்தையின் பாலினம் உள்ளிட்டவை குறித்து மனம் திறந்து பேசினர். 2 மணி நேரம் ஒளிபரப்பாகிய இந்த நேர்காணலில் சில முக்கியமான விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

திருமணத்துக்குப்பிறகு அரச குடும்பத்தில் தனது வாழ்வு குறித்து விவரித்த மேகன் தான் தனிமைப்படுத்தப்பட்டது போலவும் ஆதரவு இல்லாத நபராகவும் உணர்ந்ததாக கூறியதோடு, அந்த சமயத்தில் தான் தற்கொலை எண்ணங்களை கொண்டிருந்ததாகவும் கூறினார். இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘அந்த நேரத்தில் நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை. அது மிகவும் தெளிவான உண்மையான மற்றும் பயமுறுத்தும் சிந்தனையாக இருந்தது’’ என்றார். அப்போது நீங்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கொண்டிருந்தீர்களா என்று ஓப்ரா கேட்டதற்கு, ‘‘ஆம்’’ என்று மேகன் பதிலளித்தார். ‘‘அது எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என்று நினைத்தேன்’’ என்று அவர் கூறினார்.

மகன் நிறம் குறித்து அரச குடும்பம் கவலை
மேலும், தான் இந்த எண்ணத்திலிருந்து விடுபட தேவையான ஆலோசனையை பெற அரச குடும்பத்தின் உதவியை நாடியபோது தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் மேகன் தெரிவித்தார். அதன் பின்னர் எங்கள் மகன் கருப்பாக பிறந்து விடுவானோ என்று அரச குடும்பத்தினர் கவலைப்பட்டதாக ஹாரி-மேகன் தம்பதி வருத்தத்துடன் தெரிவித்தனர்.

‘‘ஆர்ச்சிக்கு ஏன் இளவரசர் பட்டம் கிடைக்கவில்லை. அது இன ரீதியிலானதா? நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?’’ என ஓப்ரா கேட்டார். அப்போது மேகன் ‘‘உண்மையான பதிலை தெரிவிக்கிறேன். அது நான் கர்ப்பமாக இருந்த மாதங்கள். அப்போதே எனது பிள்ளைக்கு பாதுகாப்பு கிடைக்காது, இளவரசர் பட்டம் கிடைக்காது என்றொல்லாம் பேச்சுகள் எழுந்தன. அதுமட்டுமின்றி பிறக்கும் போது எனது மகன் எவ்வளவு கருப்பாக இருப்பானோ என்பது பற்றி கவலைகளும் பேச்சுகளும் எழுந்தன,’’ என்றார்.

அரச குடும்ப பொறுப்பில் இருந்து விலக என்ன காரணம் என்று ஓப்ரா கேட்டபோது, ‘‘அது அவசியப்பட்டது,’’ என்று ஹாரி கூறினார். ஒரு கட்டத்தில் தனது குடும்பத்தினர் தன்னை பொருளாதார ரீதியில் முற்றிலும் கைவிட்டதாகவும், தனது பாதுகாப்புக்கு தானே பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஹாரி தெரிவித்தார்.‌

2-வது குழந்தை பெண்
மேலும் அவர் தனது தந்தை இளவரசர் சார்லஸ் தனது தொலைபேசி அழைப்புகளை எடுப்பதை நிறுத்திவிட்டதாகவும், தான் தனது தந்தையை எப்போதும் நேசிப்பதாகவும் ஆனால் அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் வருத்தத்துடன் கூறினார். இதுபற்றி அவர் தொடர்ந்து பேசுகையில் ‘‘அந்த சமயத்தில் என்னுடைய தந்தை என்னைக் கைவிட்டதாகவே உணர்ந்தேன். ஆனால், என் தந்தையும் சகோதரரும் அரசு குடும்பத்துக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்கள் அதில் இருந்து வெளியே வர முடியாத சூழலில் உள்ளனர்’’ என்றார். இறுதியாக ஹாரி மேகன் தம்பதி, தங்களுக்கு 2-வதாக பிறக்கவிருக்கும் குழந்தை பெண் என்று அறிவித்தனர்.

மேலும் செய்திகள்