சீனா நிறுவனங்கள் மீது தாக்குதல்: மியான்மரில் 6 நகரங்களில் ராணுவ சட்டம் அமல் நேற்றைய வன்முறையில் 20 பேர் பலி

சீனா நிறுவனங்கள் மீது தாக்குதல்: மியான்மரில் 6 நகரங்களில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் யங்கூன் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Update: 2021-03-16 08:47 GMT
யங்கூன்: 

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பிப்ரவரி 1ந்தேதி ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது.

இதனை தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது.‌ நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரியும், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ‌இந்த போராட்டத்தை ராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. ஆனாலும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை ராணுவம் அறிவித்துள்ளது.

இதனிடையே, மியான்மர் ராணுவத்துக்கு சீனா  ஆதரவாக இருப்பதாக கூறி அந்நாட்டு நிறுவனங்களை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.  இதனையடுத்து, வன்முறைகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மியான்மர் அரசை கேட்டு கொண்ட சீன தூதரகம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

இந்த நிலையில், ஐ.நா. அமைப்பின் பொது செயலாளரின் செய்தி தொடர்பு அதிகாரி ஸ்டெபானி டுஜார்ரிக் கூறும்பொழுது, மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1ந்தேதியில் இருந்து, ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பின்பு நடந்த வன்முறை சம்பவங்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட அமைதிவழியில் போராடிய போராட்டக்காரர்கள் 138 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்களாவர். அ  இதுகுறித்து இறந்தவரின் தந்தை ஒருவர் தெரிவித்ததாவது, ராணுவத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளால் எங்கள் புரட்சியை ஒதுக்கிவிட முடியாது. வெற்றி சாத்தியமாகும் வரை போராட்டத்தை தொடர்வோம். என் மகனை சுட்டுகொன்றுவிட்டார்கள். நாட்டுக்காக என் மகன் உயிர் தியாகம் செய்திருக்கின்றான். துப்பாக்கி குண்டுகளுக்கு பிள்ளைகளை பறிகொடுத்த மற்ற பெற்றோரின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில் மியான்மர் ராணுவத்திற்கு சீனா ஆதரவாக இருப்பதாக கூறி அந்நாட்டில் உள்ள சீன நிறுவனங்களை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். வன்முறைகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மியான்மர் அரசை சீனா கேட்டுக்கொண்டுள்ளது. இதனையடுத்து யங்கூனில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு டாகூன், பெய்க்கன் உட்பட 6 நகரங்களில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் யங்கூன் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

நேற்று மட்டும்  போராட்டத்தில் 20 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
கைது மற்றும் இறப்புகளைக் கண்காணிக்கும் உள்ளூர் கண்காணிப்புக் குழுவான அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம், திங்களன்று நடந்த வன்முறையில் குறைந்தது 20 பேர் இறந்துவிட்டதாகக் கூறினார்.

மேலும் செய்திகள்