அமீரகத்தில் ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - எரிசக்தி அமைச்சகம் அறிவிப்பு

அமீரகத்தில் ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று எரிசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது.

Update: 2021-03-29 10:02 GMT
அபுதாபி,

அமீரக எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அமீரக அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வழங்கி வந்த மானியம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப அறிவிக்கப்பட்டு வருகிறது. அமீரக எரிசக்தி அமைச்சகம், பெட்ரோல் நிறுவன உயர் அதிகாரிகளுடன் ஒவ்வொரு மாத இறுதியிலும் சந்தித்து பேசி அதன் அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

‘சூப்பர் 98’ பெட்ரோல் விலையானது லிட்டர் ஒன்றுக்கு 2.12 திர்ஹாமில் இருந்து 2.29 திர்ஹாம் ஆக அதிகரித்துள்ளது. ‘சூப்பர் 95’ பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 2.01 திர்ஹாமில் இருந்து 2.17 திர்ஹாம் ஆக அதிகரித்துள்ளது. ‘ஈ பிளஸ்’ பெட்ரோல் விலையானது லிட்டர் ஒன்றுக்கு 2.10 திர்ஹாம் ஆக இருக்கும். டீசல் விலையானது லிட்டர் ஒன்றுக்கு 2.15 திர்ஹாமில் இருந்து 2.22 திர்ஹாம் ஆக அதிகரித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது அடுத்த மாதம் (ஏப்ரல்) சிறிது அதிகரித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலையானது வாட் வரியுடன் கூடியது ஆகும். இந்த விலை உயர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 1ந் தேதி (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வரும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்