கடவுளின் கைகள்; பிரேசிலில் கொரோனா நோயாளிகளுக்கு தொடுதல் முறையில் சிகிச்சை

கொரோனா நோயாளிகளை வாட்டும் தனிமையை போக்க பிரேசிலில் கையுறையில் வென்னீர் நிரப்பி புதிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2021-04-09 08:37 GMT
பிரேசிலியா,

உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகளால் அதிக துயரங்களை சந்தித்து வரும் நாடுகளில் பிரேசிலும் ஒன்று.  அதிக உயிரிழப்புகளையும் அந்நாடு எதிர்கொண்டு வருகிறது.  நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புகளுக்கு உயிரிழந்து உள்ளனர் என்பது வேதனை அளிக்கும் விசயம்.

இந்த நிலையில், தடுப்பூசி தவிர வேறு தீர்வு கிடைக்காத சூழலில் கொரோனா நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.  எளிதில் பரவும் என்ற சூழலில் அவர்களை தொட்டு சிகிச்சை அளிப்பது இயலாத காரியம்.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பினால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பிரேசிலில் புதுவித சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது.

இதன்படி, ஒருமுறை உபயோகப்படுத்தி விட்டு தூக்கியெறிய கூடிய 2 கையுறைகளை நர்சுகள் வென்னீரால் நிரப்புகின்றனர்.  இதன்பின், இரு கையுறைகளையும் ஒன்றாக இணைத்து விடுகின்றனர்.  இதனை தொடர்ந்து, இணைக்கப்பட்ட இரு கையுறைகளுக்கு நடுவே கொரோனா நோயாளியின் கைகளை வைக்கின்றனர். 
இதனால், தங்களது கைகளை யாரோ பிடித்திருக்கின்றனர் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும்.  இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.  இதனை டுவிட்டரில் வெளியிட்ட நபர் கடவுளின் கைகள் என அதற்கு தலைப்பிட்டு உள்ளார். 

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்பொழுது தொற்று பரவாமல் தடுக்க அவர்களை தனிமைப்படுத்தும் சூழலில், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த கையுறைகள் கைகளாக செயல்படுவது ஆறுதல் அளிக்கும்.

மேலும் செய்திகள்