ஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிராக போராடிய பத்திரிகை அதிபருக்கு சிறை

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் கடந்த 2019-ம் ஆண்டு சீனாவுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.

Update: 2021-04-16 13:55 GMT

அதனைத் தொடர்ந்து ஹாங்காங்கில் ஜனநாயக சார்பு போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் விதமாக சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா இயற்றியது. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த சட்டத்தை சீனா அமல்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து இந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹாங்காங் போலீசார் ஜனநாயக சார்பு தலைவர்கள் பலரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களில் ஜனநாயக ஆர்வலரும், பத்திரிகை அதிபருமான ஜிம்மி லாயும் ஒருவர் ஆவார்.

இவர் நடத்திவரும் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் ஆப்பிள் டெய்லி என்கிற தினசரி செய்தித்தாள் பிரசுரமாகி வருகிறது. இந்த செய்தித்தாளில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராகவும், அதன் தலைவர்களின் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்தும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த சூழலில்தான் 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சீன அரசுக்கு எதிராக நடந்த சட்டவிரோத போராட்டங்களை ஒருங்கிணைத்து மற்றும் அதில் பங்கேற்ற குற்றச்சாட்டில் ஜிம்மி லாய் உள்பட ஜனநாயக சார்பு தலைவர்கள் 9 பேர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் மீதான விசாரணை ஹாங்காங் கோர்ட்டில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் ஜிம்மி லாய் உள்பட 9 பேரும் குற்றவாளிகள் என அண்மையில் அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சீன அரசுக்கு எதிராக சட்ட விரோதமாக போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் ஜிம்மி லாய் உள்பட 9 பேருக்கும் தலா 14 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

மேலும் செய்திகள்