இலங்கை கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்தியா உதவி

இலங்கை கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க உதவியாக இந்தியா 3 கப்பல்களை அனுப்பி உள்ளது.

Update: 2021-05-26 02:25 GMT
கொழும்பு, 

குஜராத் மாநிலம் ஹசிராவில் இருந்து அழகு சாதனப்பொருட்களுக்கான மூலப்பொருட்களை (ரசாயனங்கள்) ஏற்றிக்கொண்டு ‘எக்ஸ்பிரஸ் பியர்ல்’ என்ற சரக்கு கப்பல் கொழும்புக்கு புறப்பட்டு சென்றது. 

இதில் இந்தியா, பிலிப்பைன்ஸ், சீனா, ரஷிய சிப்பந்திகள் 25 பேர் இருந்தனர். இந்த கப்பல், கொழும்பு துறைமுகத்தில் இருந்து 9.5 கடல் மைல் தொலைவில் சென்றபோது திடீரென தீப்பிடித்தது. அந்தக் கப்பல், 20-ந்தேதி கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிடப்பட்டு, தீயணைப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 

மோசமான வானிலையால் தீ கட்டுக்குள் வரவில்லை. ஆனாலும் சிப்பந்திகள் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர். அந்தக் கப்பலின் தீயை அணைப்பதற்கு இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி உள்ளது. இதன்படி கப்பலில் ஏற்பட்டுள்ள நெருப்பை அணைக்கும் பணியில் இந்திய கடலோரக்காவல் படையின் வைபவ், வஜ்ரா மற்றும் சமுத்ரபிரஹரி ஆகிய 3 கப்பல்களை இந்தியா அனுப்பியது. இதைக் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்