ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரம்: கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் - 130 பேர் கொன்று குவிப்பு

ஆப்பிரிக்க நாட்டில் கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 130‌ பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

Update: 2021-06-06 19:56 GMT
வாகடூகு,

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.இவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரையும், அப்பாவி பொதுமக்களையும் குறிவைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க அந்த நாட்டு ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.‌

இந்த நிலையில் புர்கினா பாசோவின் வடக்கு பகுதியில் யாஹா மாகாணம் சோல்ஹன நகரில் உள்ள ஒரு கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் புகுந்தனர்.மோட்டார் சைக்கிள்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து இறங்கிய அவர்கள் அந்த கிராமத்தில் இருந்த வீடுகள் அனைத்தையும் சூறையாடினர். மேலும் கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டும், கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் வெட்டியும் தாக்குதல் நடத்தினர்.அதோடு நிறுத்திக்கொள்ளாத பயங்கரவாதிகள் ஏராளமான வீடுகளையும், அந்த கிராமத்தில் இருந்த ஒரு சந்தையையும் தீ வைத்து எரித்தனர். பயங்கரவாதிகளின் இந்த கொலைவெறி தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 130‌ பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இது 2015-ம் ஆண்டு நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடங்கியதற்கு பிறகு நடந்த மிகப்பெரிய மற்றும் மிகவும் கொடூரமான தாக்குதல் என புர்கினா பாசோ அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே புர்கினா பாசோவில் நடந்த இந்த கொடூரத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், இந்த சம்பவத்தால் தான் மிகவும் ஆத்திரம் அடைந்ததாக குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்