போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது; நலமாக இருப்பதாக தகவல்

84 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இது தொடர்பாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு பெருங்குடலில் பிரச்சினை இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

Update: 2021-07-05 17:43 GMT

இந்தநிலையில் நேற்று முன்தினம் வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை முடிந்ததும் ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார். அங்கு 10 பேரை கொண்ட மருத்துவ நிபுணர் குழு அவருக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. இந்தநிலையில் போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும், அவர் தற்போது நலமாக உள்ளதாகவும் வாடிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூனி தெரிவித்துள்ளார். எனினும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இன்னும் எத்தனை நாட்கள் ஆஸ்பத்திரியில் இருப்பார் என்கிற தகவலை மேட்டியோ புரூனி தெரிவிக்கவில்லை.

அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பிரான்சிஸ் போப் ஆண்டவராக கடந்த 2013-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டதற்கு பிறகு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்