தூதரை திரும்ப பெறும் ஆப்கானிஸ்தானின் முடிவு துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் நஜிப் அலிகேலின் 27 வயது மகள் சில்சிலா அலிகேல் கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் இஸ்லாமாபாத்தில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

Update: 2021-07-19 16:03 GMT

அதனைத் தொடர்ந்து கடத்தல்காரர்களால் அடித்து சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட சில்சிலா அலிகேல் சில மணி நேரங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமாகியுள்ளது. இந்த நிலையில் தூதரின் மகள் கடத்தப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானில் இருக்கும் ஆப்கானிஸ்தான் தூதர் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகள் அனைவரையும் திரும்ப அழைக்க ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அரசின் இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானது மற்றும் வருந்தத்தக்கது என பாகிஸ்தான் கூறியுள்ளது. மேலும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ஆப்கானிஸ்தானை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம், தூதரகத்தின் தூதர் அவரது குடும்பத்தினர் மற்றும் தூதரக ஊழியர்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் தூதர் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்கும் ஆப்கானிஸ்தான் அரசின் முடிவு துரதிர்ஷ்டவசமானது மற்றும் வருந்தத்தக்கது. ஆப்கானிஸ்தான் அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என கூறினார்.

 

மேலும் செய்திகள்