பெண்கள் புகைப்பிடிப்பதால் விவாகரத்துகள் அதிகரிப்பு - பெண் எம்.பி. சர்ச்சை பேச்சு

பெண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதே, நாட்டில் விவாகரத்து வழக்குகள் அதிகரிக்க காரணமாக இருப்பதாக பாகிஸ்தானில் பெண் எம்.பி. ஒருவரே பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Update: 2021-12-03 11:45 GMT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் ஆளும் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.யான டாக்டர் நவுஷீன் ஹமீத், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற புகையிலை குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அப்போது அவர் கூறும்போது, பாகிஸ்தானில் பெண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதே, சமீபத்தில் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை உயர காரணம்.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பாகிஸ்தானில் புகைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவில் அதிகரித்திருக்கிறது. புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பதனால் புகைப்பிடிப்பவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் சமூக ரீதியிலான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.  அப்படி பாதிக்கப்பட்ட பெண்களை தனிப்பட்ட முறையில் நானே பார்த்திருக்கிறேன்.

புகைப்பிடிக்கும் பெண்கள் திருமணம் செய்த பின்னர் அவர்கள் விவாகரத்தை சந்திக்க நேர்கிறது.  ஏனென்றால் இந்த பழக்கத்தை புகுந்த வீட்டார் ஏற்றுக்கொள்வதில்லை என அவர் கூறினார்.

பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியிருப்பதாக சமீபத்தில் தரவுகள் வெளியான நிலையில் பெண் எம்.பி. இவ்வாறு பேசியிருப்பது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கும் ஐந்து பேரில் இருவர் பெண்களாக இருப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்ற சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கிலானி என்ற அமைப்பு நடத்திய சர்வேயின் முடிவில், பாகிஸ்தானில் விவாகரத்து வழக்குகள் 58 சதவீதம்  அளவுக்கு கடுமையாக அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.  மேலும் உலகிலேயே புகையிலை பொருட்கள் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் நாடுகளுள் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பது சிகரெட் பயன்பாட்டு அதிகரிப்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

குறைந்த விலையில் சிகரெட் கிடைப்பதால் மொத்த இறப்புகளில் 11 சதவீதம் புகைப்பிடிப்பதால் ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்