பாத்ரூம் என நினைத்து விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி; நடுவானில் பரபரப்பு..!

விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, விமானியின் அறைக்குள் நுழைந்த அந்த பயணி விமானத்தின் ஒரு கதவை திறக்க முயன்றுள்ளார்.

Update: 2022-02-14 11:27 GMT
Image courtesy:(@SoccerMouaz/Twitter)
வாஷிங்டன்,

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலிருந்து நேற்று வாஷிங்டன் நகருக்கு ‘விமானம்-1775’ வானில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக, அந்த விமானம் கன்சாஸ் சிட்டி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

எதற்காக அந்த விமானம் தரையிறங்கியது என்ற தகவல் கிடைத்த போது தான், விமானத்தில் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் அரங்கேறியுள்ளது தெரிய வந்தது.

விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, விமானத்தில் உள்ள ஒரு பயணி, விமானியின் அறைக்குள் நுழைந்துள்ளார். அவர் அங்கிருக்கும் கட்டுப்பாட்டு பட்டனை பயன்படுத்தி விமானத்தின் ஒரு கதவை திறக்க முயன்றுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத விமானி, சுதாரித்துக் கொண்டு அவரை தடுத்தார். உடனே அங்கு வந்த விமான பணிப்பெண்கள் மற்றும் இதர  பணியாளர்கள் அந்த நபரை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். ஒரு விமான பணியாளர் அந்த நபரின் தலையில் காபி கோப்பையினால் அடித்து அவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். 

விமானத்தில் நடந்த இந்த சம்பவத்தை மத்திய புலனாய்வு அமைப்பு  உறுதி செய்துள்ளது. விமானம் தரையிறங்கிய பின், மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பயணி போதையில் இருந்தாரா, பாத்ரூம் என நினைத்து கதவை திறக்க முயன்றாரா அல்லது வேண்டுமென்றே அவ்வாறு செயல்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.

கடந்த ஆண்டில் மட்டும், அமெரிக்காவின் மத்திய விமானசேவை நிர்வாகம் இது போன்ற 5,981 புகார்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றுள் 4,290 புகார்கள் விமானத்தில் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்தது தொடர்பானவை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்