ஜப்பான் வெளியுறவு மந்திரி ஜனவரி இறுதியில் இந்தியாவுக்கு வருகை
இரு நாடுகளின் உறவுகளை வளப்படுத்த பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வத்துடன் இருக்கிறேன் என ஜப்பான் பிரதமர் தகைச்சி கூறினார்.;
புதுடெல்லி,
பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென்ஆப்பிரிக்காவில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அந்நாட்டுக்கு சென்றார். அப்போது, ஜப்பான் பிரதமர் தகைச்சியும் அவரும் சந்தித்து பேசி கொண்டனர். ஏறக்குறைய 35 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, புதிதாக பதவியேற்று கொண்ட தகைச்சிக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டதுடன், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
அதற்கு நன்றி தெரிவித்து கொண்ட தகைச்சி, டெல்லியில் நவம்பர் தொடக்கத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை பற்றி பிரதமரிடம் கேட்டறிந்ததுடன், சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்து கொண்டார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறேன் என்றும் கூறினார்.
இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்த மற்றும் வளப்படுத்த பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வத்துடன் இருக்கிறேன் என்றும் அவர் அப்போது கூறினார். அதற்கு பிரதமர் மோடியும் தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
இந்த சூழலில், ஜப்பான் வெளியுறவு மந்திரி டோஷிமித்சு மோதேகி ஜனவரி மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். குறைக்கடத்திகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் உள்ளிட்ட முக்கிய மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் இந்தியாவுடன் ஆழ்ந்த ஒத்துழைப்புடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என ஜப்பான் பிரதமர் தகைச்சி கூறிய நிலையில், வெளியுறவு மந்திரி மோதேகியின் இந்த வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.