டிரம்பின் மிரட்டலுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை - அமெரிக்க பாடகி மில்பென்
இந்தியாவின் சிறந்த நலனுக்காக நீங்கள் தொடர்ந்து சேவையாற்றுங்கள் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.;
வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சமீபத்தில் பிரதமர் மோடி பற்றி பேசிய விசயங்கள் இந்தியா மற்றும் வெளிநாட்டினரிடையே கவனம் பெற்றது. அவர் பேசும்போது, இந்தியர்கள் என்னை மகிழ்ச்சிப்படுத்த விரும்பினர். அடிப்படையாகவே... பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர். அவர் ஒரு சிறந்த நபர். நான் மகிழ்ச்சியாக இல்லை என அவருக்கு தெரியும். என்னை சந்தோஷப்படுத்த வேண்டியது முக்கியமாக உள்ளது. இந்தியர்கள் வர்த்தகம் செய்கின்றனர்.
விரைவில் நாங்கள் அவர்கள் மீது வரிவிதிப்புகளை அதிகரிக்கலாம் என்று கூறினார். இந்நிலையில், சர்வதேச அளவில் புகழ் பெற்ற அமெரிக்க பாடகி மேரி மில்பென், இதற்கு பதிலளிக்கும் வகையிலும், பிரதமர் மோடிக்கு ஆதரவளிக்கும் வகையிலும் பேசியுள்ளார்.
அவர் கூறும்போது, பிரதமர் மோடி மீது டிரம்புக்கு மனதளவில் மதிப்பு உள்ளது என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது. இந்தியா மீது டிரம்ப் சமீபத்தில் கொண்டுள்ள அணுகுமுறைக்கு காரணம், அவர் தவறாக வழிநடத்தப்பட்டு இருக்கலாம் என்றார். அதற்காக நான் இறைவனை வேண்டி கொள்கிறேன் என்றும் கூறினார்.
டிரம்பின் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் அல்லது அச்சுறுத்தலுக்கும் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. பிரதமர் மோடி மகிழ்ச்சிப்படுத்த வேண்டிய ஒரே நபர் அல்லது நபர்கள் என்றால் அது இந்திய மக்கள்தான் என்று கூறினார்.
இந்தியாவுக்கு எதராக சில அமெரிக்க அரசியல் சார்ந்த நபர்கள் குரலெழுப்புவது தொடர்பாக பேசிய மில்பென், அவர்கள் அமெரிக்கர்கள் பலரின் பார்வைகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று கூறினார்.
இந்தியாவின் சிறந்த நலனுக்காக நீங்கள் தொடர்ந்து சேவையாற்றுங்கள். அதற்காகவே நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். அதற்கான முதன்மை பொறுப்பே உங்களிடம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.