உலக போலீசா அல்லது நீதிபதியா...? வெனிசுலா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்
அனைத்து நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கிறோம் என சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறினார்.;
பீஜிங்,
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து நிக்கோலஸ், அவருடைய மனைவி புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க கோர்ட்டுகளில், அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதியை பெறுவார்கள் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறினார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும், வெனிசுலாவில் உள்ள எண்ணெய் மற்றும் பிற வளங்களை குறி வைத்து அமெரிக்கா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது என உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.
இதற்கு, ரஷியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்திய அரசு இதற்கு கவலை தெரிவித்துள்ளது. நிலைமையை கவனித்து வருவதுடன், வெனிசுலா மக்களின் நலனுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், வெனிசுலாவுக்குள் அத்துமீறிய செயல்பட்ட அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது. பிற தென்அமெரிக்க நாடுகளின் விவகாரத்தில் அமெரிக்கா, வருங்காலத்தில் தலையிட கூடாது என்றும் நெருக்கடி அளிக்க கூடாது என்றும் எச்சரித்து உள்ளது.
இதுபற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் பெண் செய்தி தொடர்பாளரான மாவோ நிங் கூறும்போது, மற்ற நாடுகளின் மக்கள் தேர்ந்தெடுத்த வளர்ச்சிக்கான பாதைகளை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும் என சீனா நம்புகிறது.
அதனுடன் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதுடன், ஐ.நா. ஆவணத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். குறிப்பிடும்படியாக பெரிய நாடுகள், மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக நடந்து காட்ட வேண்டும். எந்தவொரு நாடும் உலகத்தின் போலீசாகவோ அல்லது நீதிபதியாகவோ நடந்து கொள்ள கூடாது என்று கூறினார்.
அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சீனா மதிக்கிறது என கூறிய அவர், பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை வழியே வேற்றுமைகளுக்கும், விவாதங்களுக்கும் அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கு சீனா ஆதரவளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.