நிதி சேவைகள், முதலீடுகள், தொழில்நுட்பம் பற்றி லக்சம்பர்க் பிரதமருடன் ஆலோசனை: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் வலுப்பட ஆதரவளித்து வருவதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொண்டேன் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.;
லக்சம்பர்க் சிட்டி,
பிரான்ஸ் மற்றும் லக்சம்பர்க் நாடுகளுக்கு மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 6 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில், இரு நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலான உயர்மட்ட கூட்டங்களில் அவர் பங்கேற்கிறார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து இருந்தது.
இதன்படி, லக்சம்பர்க் நாட்டுக்கு செல்லும் அவர், அந்நாட்டின் துணை பிரதமர் மற்றும் வெளிவிவகார துறை மந்திரியான சேவியர் பெத்தல் மற்றும் பிற தலைவர்களையும் சந்தித்து பேச இருக்கிறார். இதில், பல்வேறு துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் அவருடைய கூட்டங்கள் முக்கியத்துவம் பெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரான்சின் பாரீஸ் நகரில் இருந்து இன்று காலை லக்சம்பர்க் நாட்டுக்கு சென்ற மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர், அந்நாட்டு பிரதமர் லூக் பிரீடனை இன்று சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், லக்சம்பர்க் பிரதமர் லூக் பிரீடனை இன்று நேரில் சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி. பிரதமர் மோடியின் இனிய வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்து கொண்டேன்.
நிதி சேவைகள், முதலீடுகள், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு உள்ளிட்டவற்றில் நம்முடைய வளர்ந்து வரும் ஒத்துழைப்பை பற்றி ஆலோசித்தோம். இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் வலுப்பட ஆதரவளித்து வருவதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொண்டேன் என்றார்.