இந்தியர்களை குறிவைத்து ஆன்லைன் கடன் செயலி மூலம் மோசடி: 2 சீனர்கள், 115 நேபாளிகள் கைது

நேபாளத்தில் இருந்து ஆன்லைன் கடன் செயலி மூலம் இந்தியர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-02-23 10:18 GMT
காத்மண்டு,

நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டு மற்றும் பக்தப்பூரில் சில கும்பல் ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காத்மண்டு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போலியாக நிறுவனங்களை பதிந்து ஆன்லைன் கடன் செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு இடங்களில் மொத்தம் 2 சீனர்கள், 115 நேபாளிகளை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவை சேர்ந்த ஜங் ஹூபோ மற்றும் வாங் ஜூனோ ஆகிய இருவரும் காத்மண்டு மற்றும் பக்தப்பூரில் ஐடி நிறுவனம் என்ற பெயரில் போலியாக ஆன்லைன் கடன் செயலியை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனங்களில் பெண்கள் உள்பட 115 நேபாளிகளை வேலைக்கு வைத்துள்ளனர்.

லோன் கியுப், ரூபி வே, வூ ரூபி என்ற பெயர்களில் ஆன்லைன் கடன் செயலிகளை தொடங்கியுள்ளனர். இந்தியர்களை குறிவைத்து இந்த ஆன்லைன் கடன் செயலிகள் தொடங்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை இந்த செயலிகள் மூலம் இந்தியர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. 

கடனை திருப்பி செலுத்தாத இந்தியர்களின் விவரங்களை ஆன்லைனில் வெளியிட்டும், மிரட்டியும் இந்த கும்பல் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலி கடன் செயலி நிறுவனம் நடத்திய 2 சீனர்கள் மற்றும் அந்நிறுவனங்களில் பணியாற்றிய பெண்கள் உள்பட 115 நேபாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்