கடந்த ஆண்டை போன்று மீண்டும் மூள்கிறதா போர்? - காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்

காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2022-04-19 07:50 GMT
ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. 

இஸ்ரேலில் ஜெருசலேம் பகுதியில் உள்ள டெம்பிள் மவுண்ட் பகுதி இஸ்லாம் - கிருஸ்தவம் - யூதம் ஆகிய 3 மதங்களின் புனித இடமாக உள்ளது. இஸ்லாமிய மத வழிபாட்டு தளங்களில் ஒன்றான அல்-அக்சா மசூதி இங்கு உள்ளது. கிருஸ்தவ மதத்தின் புனித தளமும், யூத மதத்தின் புனித தளமும் இந்த டெம்பிள் மவுண்ட் பகுதிலேயே அமைந்துள்ளது. 

இதனால், இந்த இடம் மூன்று மதங்களுக்கும் முக்கியமான இடமாக கருத்தப்படுகிறது. அதேவேளை, இந்த பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்களும் அரங்கேறுவது வழங்கம். 

இஸ்லாமிய மதத்தினரின் புனித பண்டிகளைகளில் ஒன்றான ரமலான் மாதம் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேவேளை, இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக இஸ்ரேலியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து இஸ்ரேலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா இஸ்லாமிய மத வழிபாட்டுதளத்தில் பாலஸ்தீனியர்கள் கடந்த 15-ம் தேதி காலை வழக்கமான வழிபாடு செய்தனர். வழிபாடு நடைபெற்ற பின்னர் மதவழிபாட்டுதளத்தை விட்டு வெளியே வந்த பாலஸ்தீனியர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய படையினர் மீது கற்கலை வீசியும், தீப்பற்றக்கூடிய பொருட்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். 

இதனால், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் , பாலஸ்தீனர்களுக்கும் இடையே அங்கு மோதல் வெடித்தது. தாக்குதல் நடத்தியவர்களை கலைக்க இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைகுண்டுகள், ரப்பர் குண்டுகளை பயன்படுத்தினர்.

இருதரப்பிற்கும் இடையே நடந்த இந்த மோதலில் பாலஸ்தீனர்கள் பலர் படுகாயமடைந்தனர். இந்த மோதலை தொடர்ந்து அல்-அக்சா மத வழிப்பாட்டு தளத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் - பாலஸ்தீனர்கள் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நேற்று நள்ளிரவு திடீரென ராக்கெட் தாக்குதல் நடத்தினர். காசாவில் இருந்து ஏவப்பட்ட அந்த ராக்கெட் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பு மூலம் வானிலேயே வீழ்த்தப்பட்டது. ராக்கெட்டின் சிதைந்த பாகங்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் உள்ள கடற்பரப்பில் விழுந்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டில் இஸ்ரேல் மீது காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் ஏவி தாக்குதல் நடத்துவது இதுவே முறையாகும். இந்த ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பின் ஆயுத கிடங்கு மீது இன்று அதிகாலை வான்வெளி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் விமானப்படை தெரிவித்துள்ளது. 

அதேவேளை, இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலை முறியடிக்க தங்களிடம் உள்ள விமான எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தியதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு இதே அல்-அக்சா மத வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலை தொடந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். 

இந்த ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர்  இடையே போர் வெடித்தது. 11 நாட்கள் நடந்த இந்த போரில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனை, மேற்குகரையில் மொத்தம் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதும், அதேபோன்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் மீண்டும் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே மீண்டும் போர் மூளும் அச்சம் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்