#லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவுடனான போரில் உக்ரைன் வெற்றி பெற முடியும் - நேட்டோ தலைவர்

ரஷியாவுடனான போரில் உக்ரைன் வெற்றி பெற முடியும் என்று நேட்டோ தலைவர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-16 00:36 GMT
Image Courtesy: AFP
கீவ், 

உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-  

மே 16,  06.00 a.m

அடுத்த 30 நாட்களில் ரஷியா தனது முன்னேற்ற விகிதத்தை வியத்தகு முறையில் துரிதப்படுத்த வாய்ப்பில்லை: இங்கிலாந்து இராணுவ உளவுத்துறை

மே 16,  05.56 a.m

டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய தாக்குதல் "வேகத்தை இழந்துவிட்டது மற்றும் கால அட்டவணையில் கணிசமாக பின்தங்கியுவிட்டது": இங்கிலாந்து இராணுவ உளவுத்துறை

மே 16,  05.51 a.m

ரஷியா உக்ரைனுக்கு அனுப்பிய தரைப்படைகளில் மூன்றில் ஒரு பகுதியை இழந்திருக்கலாம்: இங்கிலாந்து இராணுவ உளவுத்துறை

மே 16,  05.06 a.m

லுஹான்ஸ்கில் 10 சதவீதத்தை உக்ரைன் இன்னும் வைத்திருக்கிறது - அம்மாநில கவர்னர் தகவல்

உக்ரேனிய இராணுவம் அதன் கவர்னரின் தகவல்படி, கடுமையான ரஷிய தாக்குதல்களின் கீழ் வந்த போதிலும், லுஹான்ஸ்க் கிழக்குப் பகுதியில் பத்தில் ஒரு பகுதியைத் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது. 

ரூபிஸ்னே, செவெரோடோனெட்ஸ்க் மற்றும் லிசிசான்ஸ்க் நகரங்களின் புறநகர்ப் பகுதிகளை ரஷிய ராணுவத்தால் இன்னும் கைப்பற்ற முடியவில்லை என்று கவர்னர் செர்ஹி கெய்டாய் தெரிவித்தார்.

ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள், ரஷிய இராணுவத்தின் உதவியுடன் லுஹான்ஸ்கின் நிர்வாக எல்லைகளுக்கு முன்னேறியதாக மாஸ்கோ கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்த கருத்துக்கள் "கற்பனை" என்று கெய்டாய் தெரிவித்தார்.

மே 16,  04.52 a.m

ரஷிய அதிபர் புதினை வீழ்த்த சதி நடப்பதாக உக்ரைன் ராணுவ மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார். 

ஸ்கை நியூஸ் நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் உக்ரைன் ரஷியா போர் ஒரு திருப்புமுனையை எட்டும் என்றும் 
இந்த ஆண்டு இறுதிக்குள் போர் முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த போரில் ரஷியா தோல்வி அடைந்தால், அதிபர் பதவியில் இருந்து புதின் அகற்றப்படுவார் என்றும் இதன் மூலம் ரஷியா வீழ்ச்சி அடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மே 16,  04.05 a.m

ரஷியாவிற்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. 

பெர்லினில் நடந்த அந்த அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில், பேசிய ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி அன்னலெனா பேர்பாக், உக்ரைன் தற்காப்புக்கு தேவைப்படும் வரை ராணுவ உதவியை ஜெர்மனி வழங்குவதாக கூறினார். 

ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெற முடியும் என்றும், உக்ரைன் படையினர் தங்களது தாயகத்தை பாதுகாக்க தைரியமாக போரிட்டு வருவதாகவும்,நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

மே 16,  03.32 a.m

ரஷிய அதிபர் புதின் இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் உளவாளி கிறிஸ்டோபர் ஸ்டீல் தெரிவித்துள்ளார். தமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் புதின் கடுமையாக நோய்வாய்பட்டுள்ளார் எனவும் கிறிஸ்டோபர்  குறிப்பிட்டுள்ளார்.

மே 16,  02.52 a.m

டான்பாசில் ரஷியா தங்கள் படைகளை சுற்றி வளைக்க முயற்சி - உக்ரைன் தகவல்

உக்ரைனின் கிழக்கில் ரஷியா அந்நாட்டு பகுதிகளை வெகுவாக கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. இதன்படி ரஷிய ராணுவம் டான்பாசிற்கான போரில் உக்ரேனியப் படைகளைச் சுற்றி வளைக்க முற்படுகிறது என்றும் மூலோபாய ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள நகரமான இசியத்தை சுற்றி எதிர் தாக்குதலைத் தடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. 

கிழக்கில் உள்ள உக்ரேனிய நிலைகளை ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக ரஷியா கூறியது, அதன் படைகள் இசியும் மற்றும் டேனேட்ஸ்க் இடையே உள்ள உக்ரேனிய பிரிவுகளை சுற்றி வளைக்க முற்படுகையில், கட்டளை மையங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து தாக்கியது.

உக்ரைனின் கூட்டுப் படைகளின் பணிக்குழு மற்றும் அதன் ராணுவம் 17 தாக்குதல்களை முறியடித்ததாகவும், 11 ரஷிய உபகரணங்களை அழித்ததாகவும், அதன் வான் பாதுகாப்பு இரண்டு ரஷிய ஹெலிகாப்டர்கள் மற்றும் ஐந்து ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 16,  01.25 a.m

நேட்டோ தலைவர் உக்ரைன் போரை வெல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் நடந்த கூட்டத்தில், வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பின் (நேட்டோ) தலைவர் உக்ரைன் போரில் வெற்றிபெற முடியும் என்று கூறினார், மேலும் இராணுவ ஆதரவு மற்றும் கூட்டணியில் சேர பின்லாந்து மற்றும் ஸ்வீடன் எதிர்பார்க்கும் ஏலங்களுக்கு விரைவான ஒப்புதல் தேவை என்றும் தெரிவித்தார்.

"மாஸ்கோ திட்டமிட்டபடி உக்ரைனில் ரஷியாவின் போர் நடக்கவில்லை" என்று நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறினார்.

மே 16,  12.41 a.m

லிவிவ் பிராந்தியத்தில் இருந்த உக்ரைன் ராணுவ கட்டமைப்பு வளாகம், ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் அழிக்கப்பட்டது.

உக்ரைன் போரை ரஷியா தொடுத்தபோது தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ், முக்கிய துறைமுக நகரான மரியுபோல், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியம்தான் முக்கிய இலக்குகள் ஆகும்.

தலைநகர் கீவை உக்ரைன் படைகளின் பலத்த எதிர்ப்பால் கைப்பற்ற முடியாமல் ரஷிய படைகள் பின்வாங்கின. இரண்டாவது பெரிய நகரமான கார்கிவிலும் உக்ரைன் படைகளின் பதிலடிக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ரஷிய படைகள் பின்வாங்கி விட்டன. மரியுபோல் நகரை போர் தொடங்கிய நாள் முதல் முற்றுகையிட்டும், இன்னும் அதன் கடைசி கோட்டையாக திகழ்கிற அஜோவ் உருக்காலையை வசப்படுத்த முடியவில்லை.

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை முழுவதும் தனதாக்கிக்கொள்வதற்கான தாக்குதலை ரஷிய படைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன.

ராணுவ கட்டமைப்பு வளாகம் அழிப்பு

இந்த நிலையில் நாட்டின் மேற்கு பகுதியான லிவிவ் பிராந்தியத்தில் ரஷிய படைகள் கடுமையான ஏவுகணை தாக்குதலை நடத்தி, அங்கிருந்த ராணுவ கட்டமைப்பு வளாகத்தை முற்றிலும் அழித்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை அந்த பிராந்தியத்தின் கவர்னர் மேக்சிம் கோசிட்ஸ்கி உறுதிபடுத்தி, சமூக ஊடகம் ஒன்றில் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், “எதிரிகளின் 4 ஏவுகணைகள், லிவிவ் பிராந்தியத்தில் இருந்த ராணுவ கட்டமைப்பு வளாகத்தை தாக்கின. முதல் கட்ட தகவல்கள், அங்கு உயிர்ப்பலி நேரிட்டதாக கூறவில்லை. அதே நேரத்தில் உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரஷியாவின் 2 ஏவுகணைகளை வழிமறித்து தாக்கி அழித்துள்ளன’’ என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உக்ரைன், ஒரு நீண்ட கால போரின் அடுத்த கட்டத்தில் நுழைகிறது என்று உக்ரைன் ராணுவ மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார்.

மரியுபோல் நகரில் இருந்து கிட்டத்தட்ட ஆயிரம் கார்களுடன் வெளியேறிய பொதுமக்கள் ஜபோரிஜியா நகருக்கு பாதுகாப்பாக போய்ச் சேர்ந்திருக்கிறார்கள்.

கார்கிவ் நகரில் இருந்து ரஷிய படைகள் பின்வாங்கிய பின்பு அங்கு அமைதி நிலவுவதாகவும், குண்டு வீச்சோ, பீரங்கிச்சூடோ, ஏவுகணை தாக்குதலோ நடைபெற்றதாக தகவல் இல்லை.

3-ல் ஒரு பங்கு இழப்பு

உக்ரைன் போர் தொடர்பாக இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதில் ஒன்று, ரஷியா கடந்த பிப்ரவரியில் நடத்திய தரைப்போரில் மூன்றில் ஒரு பங்கு படையினரை இழந்திருக்கலாம் என்பதாகும்.

மற்றொரு முக்கிய தகவல், தற்போதைய சூழலில் ரஷியாவின் முன்னேற்ற விகிதத்தை அடுத்த 30 நாளில் வியக்கத்தக்க அளவுக்கு விரைவுபடுத்த வழி இல்லை என்பதாகும்.

‘உக்ரைன் வெற்றி பெறும்’

ரஷியா தொடுத்துள்ள போரில் உக்ரைன் வெற்றி பெறும் என்று நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறினார். இதுதொடர்பாக நேற்று அவர் பிரசல்ஸ் நகரில் மேலும் கூறுகையில், “கீவ் மற்றும் கார்கிவ் நகரங்களை ரஷியாவால் கைப்பற்ற முடியாமல் போய்விட்டது. இது டான்பாசில் அதன் தாக்குதலுக்கு தடையாக உள்ளது” என தெரிவித்தார்.

பின்லாந்தும், சுவீடனும் நேட்டோ அமைப்பில் சேருவது அந்த நாடுகளை பாதுகாப்பானதாக மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உக்ரைன் போருக்கு மத்தியில், கிட்டத்தட்ட ரஷியாவின் பிடியில் சிக்கிவிட்ட மரியுபோல் நகரில் நேற்று பாடல் போட்டி நடந்தது. இதில் உக்ரைனின் கலுஷ் இசைக்குழு, ‘ஸ்டெபானியா’ என்ற பாடலைப்பாடி வெற்றி பெற்றது. இது போரின்போது, உக்ரைனியர்கள் பாடிய பிரபல பாடலாக மாறி இருந்தது நினைவுகூரத்தக்கது.

இதையொட்டி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நமது தைரியம் உலகையே ஈர்க்கிறது. நமது இசை, ஐரோப்பாவை வென்றது. அடுத்த ஆண்டு உக்ரைன், யூரோவிஷன் பாடல் போட்டியை நடத்தும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்