கனடாவில் காலிஸ்தானிய தலைவர் படுகொலை: இந்திய தூதர் வெளியேற்றம்; பதிலடி கொடுத்த இந்தியா

கனடாவில் காலிஸ்தானிய தலைவர் படுகொலை சம்பவத்தில் இந்தியாவின் தூதரை கனடா வெளியேற்றிய நிலையில், பதிலடியாக கனடா தூதரை வெளியேறும்படி இந்தியா கூறியுள்ளது.

Update: 2023-09-19 05:42 GMT

புதுடெல்லி,

கனடா நாட்டில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என நீண்டகால குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த தாக்குதல்களில் காலிஸ்தானியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. கனடாவில் இந்து கோவில்கள் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோக்களும் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தின.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் கனடாவின் சுர்ரே நகரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தானிய தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர், கனடாவின் குடிமகனாகவும் இருந்துள்ளார். சுர்ரே நகர குரு நானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், இவருடைய படுகொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கும் கனடா குடிமகனின் படுகொலைக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி கனடா பாதுகாப்பு முகமைகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றன என கூறினார்.

கனடாவில் குடிமகன் ஒருவர் படுகொலையில் அந்நியர் ஒருவரின் அல்லது வெளிநாட்டு அரசின் தொடர்பு இருப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது என்று அவர் அழுத்தி கூறினார். இதனால், சில இந்தோ-கனடியர்கள் கோபத்தில் உள்ளனர் என்றும் அச்சத்திலும் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், உண்மை விவரங்கள் தெரிய, கனடாவுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எனினும், இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது.

இந்த நிலையில், கனடாவுக்கான இந்திய தூதர் ஒருவரை வெளியேற்றி கனடா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை, கனடா நாட்டு வெளியுறவு மந்திரி மெலனி ஜாலி உறுதிப்படுத்தினார். எனினும், இந்திய தூதருடைய பெயர் உள்ளிட்ட பிற விவரங்களை வெளியிடவில்லை.

இந்த நிலையில், இந்தியாவுக்கான கனடா தூதர் கேமரூன் மெக்கேவை இந்தியாவில் இருந்து வெளியேறும்படி மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது. இதன்படி, 5 நாட்களுக்குள் அவர் இந்தியாவை விட்டு வெளியேறும்படி கேட்டு கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்