பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 11 தொழிலாளர்கள் பலி

பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் 11 தொழிலாளர்கள் பலியாகினர்.

Update: 2023-08-20 07:30 GMT

கோப்புப்படம்

லாகூர்,

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ராணுவச் சாவடியில் கட்டுமான பணிக்கு செல்லும் போது தொழிலாளர்கள் சென்ற வேனில் வெடிகுண்டு வைத்து இந்த கோர சம்பவத்தை நடத்தியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

குண்டுவெடிப்பில் பலியானவர்கள் தெற்கு வஜிரிஸ்தானில் உள்ள மக்கின் மற்றும் வானா தெஹ்சில் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் மேலும் விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தான் பஜூர் பகுதியில் நடந்த தற்கொலை படை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின் நடந்துள்ளது. அந்த தாக்குதலில் 23 குழந்தைகள் உட்பட 63 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 200- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிய அரசு அமைப்பு பொறுப்பேற்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த சம்பவம் நடந்து சில வாரங்களுக்கு பின் வேன் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்