நேபாளத்தின் முதல் பணக்காரரின் சகோதரர் அதிரடி கைது; புலனாய்வு துறை நடவடிக்கை

நேபாளத்தின் முதல் பணக்காரராக அறியப்படும் பினோத் சவுத்ரியின் சகோதரர் அருண் சவுத்ரி ஆவார்.

Update: 2024-02-01 18:14 GMT

காத்மண்டு,

நேபாள நாட்டில் பன்ஸ்பாரி என்ற பெயரிலான அரசு தோல் காலணி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்குரிய நிலங்களை அருண் சவுத்ரி என்பவர் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு தன்வசப்படுத்தி இருக்கிறார்.

இதுபற்றி அந்நாட்டின் மத்திய புலனாய்வு கழகம் (சி.ஐ.பி.) விசாரணை நடத்தி உள்ளது. இதன்பின் காத்மண்டு நகரில் உள்ள லஜிம்பத் பகுதியில் உள்ள இல்லத்தில் வைத்து அருண் சவுத்ரியை சி.ஐ.பி. அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

அவரை 4 நாட்கள் காவலில் வைக்க கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. இதனை சி.ஐ.பி. தலைவரான கிரண் பஜ்ராச்சார்யா உறுதிப்படுத்தி உள்ளார். இதேபோன்று, ஆலையின் முன்னாள் வாரிய தலைவரான அஜித் நாராயண் தபா என்பவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

இதில், நேபாளத்தின் முதல் மற்றும் ஒரே பணக்காரராக அறியப்படுபவர் பினோத் சவுத்ரி. அவர், வங்கி துறை, கல்வி, ஓட்டல், மருத்துவம், நுகர்வோர் பொருட்கள் என பல துறைகளிலும் தொழிற்சாலைகளை அமைத்து வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது சகோதரர் அருண் சவுத்ரி ஆவார். இந்த கைது நடவடிக்கை பற்றி சவுத்ரி குழுமம் சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. நேபாளத்தின் நிதி அமைச்சகமும், இந்த விவகாரம் முக்கியம் வாய்ந்தது என கூறியுள்ளது. சட்டவிரோத வகையில் அரசு நிலங்களை தன்வசப்படுத்திய வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்